ராம் ஜென்மபூமி இயக்கத்தின் முக்கிய நபரும், இரண்டு முறை பாஜக மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம் விலாஸ் வேதாந்தி (67), மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். அவரது சீடரான மஹந்த் ராகவேஷ் தாஸ் தெரிவித்ததாவது, வேதாந்தியின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை காலை அயோத்தியில் உள்ள சரயு நதியில் ஜல சமாதி (முழுக்கு) முறையில் நடைபெறும் என்றார்.

வேதாந்தியின் மறைவு செய்தி, அயோத்தி முழுவதும், துறவி சமூகத்தினரிடையேயும், பாஜக வட்டாரங்களிலும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம்  புதன்கிழமை மதச் சொற்பொழிவு ஒன்றில் பங்கேற்பதற்காக ரேவாவிற்குச் சென்றிருந்த வேதாந்திக்கு, அங்கு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ராம் விலாஸ் வேதாந்தி, ஸ்ரீ ராம் ஜென்மபூமி நியாஸின் நிர்வாகத் தலைவராக பதவி வகித்தவர். மேலும், 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் மச்சலிஷஹர் மற்றும் பிரதாப்கர் மக்களவைத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக இருந்த வேதாந்தி, 2020 ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 32 பேரில் ஒருவராக இருந்தார். இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோரும் அடங்குவர்.

வேதாந்தியின் மறைவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“ஸ்ரீ ராம் ஜென்மபூமி இயக்கத்தின் முக்கிய நபரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அயோத்தி தாமில் உள்ள வசிஷ்ட ஆசிரமத்தின் மதிப்பிற்குரிய துறவியுமான டாக்டர் ராம் விலாஸ் வேதாந்தி ஜி மகாராஜின் மறைவு, ஆன்மீக உலகிற்கும் சனாதன தர்மத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு என் பணிவான அஞ்சலிகள்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. மதம், சமூகம் மற்றும் தேசத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு உத்வேகமாகும். அவரது ஆன்மாவுக்கு இறைவன் சாந்தி அளிக்கவும், துக்கமடைந்த அவரது சீடர்கள்  இந்த துயரை தாங்கும் வலிமை வழங்கவும் பிரார்த்திக்கிறேன்,” என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வேதாந்தி, ரேவாவில் உள்ள ஷியாம் ஷா மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் அக்ஷய் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “அவர் அனுமதிக்கப்பட்டபோது, இரத்த விஷம் (செப்டிசீமியா) தொற்று கடுமையாக இருந்தது. இரத்த அழுத்தம் குறைந்து, சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, வென்டிலேட்டர் ஆதரவு அளிக்கப்பட்டது. இருப்பினும், திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார்,” என்றார்.

மாரடைப்புக்குப் பிறகு, வேதாந்தியை விமான ஆம்புலன்ஸ் மூலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அடர்ந்த மூடுபனி காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி கூறுகையில், “விமான ஆம்புலன்ஸ் ரேவாவை அடைந்திருந்தது. ஆனால் மூடுபனி காரணமாக தரையிறங்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே அவர் காலமானார்,” என்றார்.

அயோத்தியில் இந்து தாம், நயா காட் பகுதியில் வசித்து வந்த வேதாந்திக்கு, வசிஷ்ட பவன் என்ற ஆசிரமமும் இருந்தது. அவர் 1958 அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தவர் என சன்சாத் இணையதளம் தெரிவித்துள்ளது. வேதாந்தியின் உடல் அயோத்திக்கு கொண்டு வரப்படுவதாக அவரது சீடர் மஹந்த் ராகவேஷ் தாஸ் தெரிவித்தார். கடந்த 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் ராம் லல்லா சிலைகளை நிறுவியதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும், ஹனுமன்கரியைச் சேர்ந்த மஹந்த் அபிராம் தாஸின் சீடராக ராம் விலாஸ் வேதாந்தி இருந்தார்.

மேலும், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி கட்டமைப்பை இடிக்க கரசேவகர்களைத் தூண்டியது பாஜக தலைவர் எல்.கே. அத்வானி அல்ல, தானே என வேதாந்தி தெரிவித்த கருத்து, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.