பீகார் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, 10-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக்கொண்ட நடத்தை காரணமாக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்து வந்த பெண் மருத்துவருக்கு சான்றிதழ் வழங்கும் போது, அவரது முகம் தென்படும் வகையில் ஹிஜாபை சற்றே மாற்றுமாறு நிதிஷ் குமார் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. அந்தச் சூழலில், அவர் நேரடியாக ஹிஜாபை பிடித்து இழுத்ததாகக் கூறப்படும் காட்சிகள், நிகழ்வில் இருந்தவர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை பார்த்து மேடையில் இருந்த சிலர் சிரித்ததாகவும், துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி அந்த நிலையை சமாளிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ராஷ்டீரிய ஜனதா தள கட்சி, பெண்களுக்கு மரியாதை மற்றும் அதிகாரமளிப்பு குறித்து பேசும் அரசியல் தலைமையின் உண்மையான முகம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், முதலமைச்சரின் நடத்தை அவரது மனநிலை குறித்து சந்தேகங்களை எழுப்புவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ये बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं।
इनकी बेशर्मी देखिए- एक महिला डॉक्टर जब अपना नियुक्ति पत्र लेने आई तो नीतीश कुमार ने उनका हिजाब खींच लिया।
बिहार के सबसे बड़े पद पर बैठा हुआ आदमी सरेआम ऐसी नीच हरकत कर रहा है। सोचिए- राज्य में महिलाएं कितनी सुरक्षित होंगी?
नीतीश कुमार… pic.twitter.com/2AO6czZfAA
— Congress (@INCIndia) December 15, 2025
காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, இது ஒரு பொது நிகழ்ச்சியில் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை எனக் குறிப்பிட்டுள்ளது. நிதிஷ் குமாரின் நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சைகள் இதற்கு முன்பும் எழுந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அவர் பேசிக்கொண்டிருந்ததும், சிரித்தபடி இருந்ததும் கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த நேரத்தில், முதன்மை செயலாளர் தீபக் குமார் தலையிட்டு அவரை அமைதிப்படுத்தியதாக கூறப்பட்டது.
அதேபோல், தேசிய கீதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட பின்னரும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் கைகுலுக்கச் சென்ற சம்பவமும் விமர்சனங்களை சந்தித்தது. இதுபோன்ற பல நிகழ்வுகள், அவரது பொது நடத்தை குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ச்சியான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளமும், கூட்டணி கட்சியான பாஜகவும் மறுத்து வருகின்றன. கடந்த மே மாதம், மரக்கன்று ஒன்றை அதிகாரி வழங்கியபோது, அதை நகைச்சுவையாக தலையில் வைத்த சம்பவத்தையும் எதிர்க்கட்சிகள் தேவையற்ற அரசியல் சர்ச்சையாக மாற்றுவதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், கடந்த அக்டோபரில் நடைபெற்ற ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான காணொலி வழி பட்டமளிப்பு விழாவில், நிகழ்ச்சி விவரங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, நிதிஷ் குமார் நீண்ட நேரம் கைகளை கூப்பியபடி அமர்ந்திருந்ததும், அவ்வப்போது பக்கவாட்டில் பார்த்ததும், லேசாக புன்னகை செய்ததும் கவனிக்கப்பட்டது. அந்த நிகழ்வும் அரசியல் விமர்சனங்களுக்கு இடமளித்தது. மேலும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, அவரது உடல்நிலை மற்றும் நிர்வாகத் திறன் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தற்போது நிகழ்ந்த சம்பவங்கள் அந்த விவாதங்களுக்கு மேலும் வலுவூட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
