தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக-வை வீழ்த்த டெல்லி பாஜக தலைமை அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக எதிர்ப்பு வாக்குகளைச் சிதறவிடாமல் ஒருங்கிணைக்க அதிமுக தலைமையிலான வலுவான கூட்டணியை உருவாக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். தற்போது இக்கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷா ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதில் அதிமுக 140-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தனித்துப் போட்டி என்பதில் விஜய் உறுதியாக இருந்தாலும், அவருக்குப் பல்வேறு முனைகளில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. தவெக-வின் தேர்தல் செலவுகள் மற்றும் பொருளாதார பலத்தை மத்திய புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது. குடும்ப விவகாரங்கள், சிபிஐ வழக்குகள் மற்றும் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்களால் விஜய் சற்று அப்செட் ஆகியுள்ளதாகத் தெரிகிறது.
இதனைப் பயன்படுத்தி, விஜய்க்குப் போதிய தொகுதிகளை ஒதுக்குவதோடு, கூட்டணியில் அதிமுக-வுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படும் என அமித் ஷா தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் தனது முடிவை மாற்றுவார் என டெல்லி பாஜக தலைமை நம்புகிறது. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் எப்படியும் விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வருவார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும், விஜய்யின் வருகை குறித்த சந்தேகங்கள் அவருக்கு நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் “கூட்டணி விரிவாக்கம் குறித்து தேர்தல் நேரத்தில் தெளிவான முடிவு தெரியும்” என அமித் ஷா கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
