பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்து வருவதற்கு மற்றொரு அதிர வைக்கும் ஆதாரம் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி ராணா முகமது அஷ்ஃபாக், பகிரங்கமாக இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கசூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பயங்கரவாத தளபதி ராணா, இந்து மதக் கொள்கைகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளைக் கடுமையாகத் தாக்கினார். மேலும், இந்துக்களின் தெய்வங்களான காளி மாதா மற்றும் பகவான் ராமரை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமான மற்றும் அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். அங்கிருந்த கூட்டத்தை இந்துக்களுக்கு எதிராகப் போரிடுமாறு அவர் தூண்டிவிட்டார்.

இந்த ராணா முகமது அஷ்ஃபாக், ‘பாகிஸ்தான் மர்கஸி முஸ்லிம் லீக்’ (PMML) என்ற கட்சியுடன் தொடர்புடையவர். இது லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் பிரிவாகக் கருதப்படுகிறது. பயங்கரவாதிகள் அரசியல் முகம் கொண்டு பகிரங்கமாக வன்முறையைத் தூண்டுவது, பாகிஸ்தான் அரசின் ஆதரவோடுதான் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இதற்கிடையில், லஷ்கர் அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா காலித் கசூரி, கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். “2025-இல் நாங்கள் வானத்தில் ஆதிக்கம் செலுத்தினோம், 2026-இல் கடலில் ஆதிக்கம் செலுத்துவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களைத் தரைமட்டமாக்கியது. இதற்குப் பதிலடியாகவே லஷ்கர் அமைப்பின் “வாட்டர் போர்ஸ்” (Water Force) மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் அமைப்பிடம் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவர்ஸ் (Scuba Divers) மற்றும் நீச்சல் வீரர்கள் உள்ளதாகவும், அவர்களுக்குப் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் கடலுக்கடியில் தாக்குதல் நடத்தப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 26/11 மும்பை தாக்குதலின் போது பயங்கரவாதிகள் கடல் வழியாகவே இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.