பிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலங்களுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு சென்றார். அங்குள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, பிறகு அசாம் மாநிலத்துக்குச் சென்றார். அசாமில் இன்று காலை தர்ரங்கில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், மொத்தம் ரூ.6,300 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம் மற்றும் கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெற்றது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின்போது அசாம் மக்களின் மனதில் காயம் ஏற்படுத்திய நேருவின் தவறுகள் இன்னும் ஆறவில்லை. பாஜக தலைமையிலான இரட்டை எஞ்சின் அரசு, அசாமின் கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரம்மபுத்திரா நதியின் மீது நாங்கள் 6 பாலங்களை கட்டியுள்ளோம். ஆனால், காங்கிரஸ் தனது ஆட்சியில் முக்கியம் வாய்ந்த நதியின் மீது வெறும் 3 பாலங்கள் மட்டுமே கட்டியது. ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு சலுகை அளிக்க முடியாது. ராணுவம் பலத்துடன் நாட்டை பாதுகாத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு துணையாக செயல்படுகிறது. மேலும் ஊடுருவல் மூலம் மக்கள் தொகையை மாற்றும் முயற்சிகளை பாஜக சகிப்பதில்லை. உங்கள் நிலத்தை பாதுகாப்பது எங்கள் கடமை” என்றார்.
