17-வது ஆசியக் கோப்பை (20 ஓவர்) கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டமான 6-வது லீக் போட்டியில், துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் இடையிலான அண்மைய 16 வெள்ளை பந்து (ஒருநாள், டி20) போட்டிகளில், இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் வென்றது மட்டும் 3 போட்டிகளில்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் உறவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் பாகிஸ்தான் எதிரான போட்டிக்காக, பாஜக தலைமையிலான மத்திய அரசை எம்பி அசதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஒவைசி கூறியதாவது:”அசாம் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்களிடம் எனது கேள்வி, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பஹல்காமில் நமது 26 குடிமக்களை மதத்தின் பெயரில் சுட்டுக் கொன்றனர். அப்படி இருக்க, அந்த நாடுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு பணம் முக்கியமா? அல்லது 26 உயிர்கள் முக்கியமா?

மேலும் நேற்றும் அந்த 26 பேருடன் நாங்கள் நின்றோம். இன்றும் நிற்கிறோம். நாளையும் அவர்களுடன் நிற்போம்” என்று கூறினார். இந்த விவகாரம் சமூக ஊடகங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.