தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி குறித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீரின் விமர்சனங்கள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என்று அவர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை மட்டையைச் சுற்றுபவர் என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய முகமது அமீர், தற்போது இந்திய அணியின் வாய்ப்பு குறித்துப் பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுகிறதோ இல்லையோ, ஆனால் இந்திய அணி நிச்சயமாக கடைசி 4 இடங்களுக்குள் (அரையிறுதி) வராது. தென் ஆப்பிரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளுமே அந்தப் பிரிவில் இருந்து முன்னேறும்.”
சூப்பர்-8 சுற்று தொடங்குவதற்கு முன்பே அமீர் கணித்தபடி, முதல் பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இதனால் அவரது கணிப்பு பாதி உண்மையாகியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியாவிற்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தற்போது சூப்பர்-8 சுற்றின் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. எஞ்சியுள்ள 2 இடங்களுக்காக இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அரையிறுதிக்குச் செல்லும் அணியைத் தீர்மானிக்கும் முக்கியப் போட்டி வரும் மார்ச் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. புள்ளிப்பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் (+1.791) மற்றும் இந்தியா (-0.100) ஆகிய இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலையில் இருந்தாலும், மார்ச் 1 அன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும். மேலும் முகமது அமீரின் கணிப்பைப் பொய்யாக்கி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா அல்லது அவரது வார்த்தை நிஜமாகுமா என்பது மார்ச் 1-ஆம் தேதி தெரிந்துவிடும்.
