ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர்-8 சுற்றின் மிக முக்கியமான கடைசி லீக் ஆட்டம் இன்றிரவு (மார்ச் 1) நடைபெறுகிறது. இதில் இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. நடப்புத் தொடரில் இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. நான்காவது இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்பதை இன்றைய ஆட்டம் தீர்மானிக்கும்.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் கடைசி அணியாகத் திகழும். இந்திய ரசிகர்கள் இந்த ஆட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, சூப்பர்-8 சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. லீக் சுற்றில் இந்திய அணியிடமும், சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்திடமும் தோல்வியடைந்ததே அந்த அணியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை தொடரில் அவரது தலைமைப் பண்பு மற்றும் வியூகங்கள் திருப்திகரமாக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கருதுகிறது.
மேலும் தொடர் தோல்விகளால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள், கேப்டன் சல்மான் ஆகா மற்றும் சீனியர் வீரர்கள் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
