ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக இந்தியா தங்களை உலக அரங்கில் பழிவாங்குவதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக சேர அஜர்பைஜான் முயற்சி செய்தபோது, அதற்கான விண்ணப்பத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக அந்நாட்டு அரசு நேரடியாக சாடியுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுக்கு துணை நின்றதற்காக இந்தியா அந்த நாட்டின் வளர்ச்சி முயற்சிகளை தடுக்கும் வகையில் செயல்படுவதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, “பாகிஸ்தான் எங்கள் நெருங்கிய நண்பர். அதனால் இந்தியா எவ்வித நடவடிக்கையையும் எடுத்தாலும், அந்த நட்பு உறவு தொடரும். உலக அரங்கில் எங்கள் உரிமைகளை உறுதியாக எதிர்கொள்ளும் சக்தி எங்களுக்கு இருக்கிறது. இந்தியா எங்கள் மீது உலக மேடையில் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது என்றாலும், அதில் எவ்வித பயனும் இல்லை” என அஜர்பைஜான் வெளிநாட்டு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தானுடன் நட்பு வைத்துக்கொள்வோருக்கு எதிராக மேடைகளில் குறுகிய நோக்குடன் செயல்படுவதாகவும், இது சர்வதேச அரசியலில் தேவையற்ற விரோத மனப்பான்மையை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு சார்பில் கூரப்பட்டுள்ளது.
