தரமற்ற மருந்துகளின் இறக்குமதியால் சுகாதாரத் துறை பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, பாகிஸ்தானில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதை மூன்று மாதங்களுக்குள் நிறுத்த வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொருளாதார விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பராதார் பேசியதாவது: “நமது சுகாதாரத் துறையின் முக்கியப் பிரச்சினை, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற மருந்துகள்தான்.

அனைத்து மருந்து இறக்குமதியாளர்களும் உடனடியாக மாற்று விநியோக வழிகளைக் கண்டறிய வேண்டும். பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள், மூன்று மாதங்களுக்குள் தங்கள் கணக்குகளை முடித்துக்கொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த உத்தரவுக்குப் பிறகும் பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்ந்தால், அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்படாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எல்லையை மூடி வர்த்தக உறவுகளை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் பாகிஸ்தானை நம்பி இருக்காமல், மாற்று வர்த்தக வழிகளைப் பயன்படுத்த வேண்டும்

தற்போது சுமார் ஒரு மாத காலமாக எல்லையில் வர்த்தகம் தடைபட்டுள்ளதால் இரு நாடுகளிலும் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.