பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்றும், அவர் இல்லாத ஒரு அணியால் வலுவான வங்கதேசத்தை எதிர்கொள்வது கடினம் என்றும் அந்த அணியின் முன்னாள் தொடக்க வீரர் அகமது ஷெசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பை, இரு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி எனத் தொடர்ச்சியாக நான்கு முறை அரையிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் அந்த அணி வெளியேறியுள்ளது. குறிப்பாக, பேட்டிங் வரிசையின் பலவீனம் மற்றும் இலக்குகளை விரட்டுவதில் உள்ள தடுமாற்றம் ஆகியவை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் ஃபார்ம் இன்றித் தவித்ததால், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து அகமது ஷெசாத் கூறியதாவது, “அனைத்துத் தவறுகளுக்கும் பாபர் அசாமை மட்டுமே குறை சொல்வது நியாயமல்ல. டி20 போட்டிகளைப் போலவே, ஒருநாள் அணியிலிருந்தும் அவரைத் தூக்கி எறிய வேண்டாம். 2027 உலகக் கோப்பைக்குத் தயாராக வேண்டும் என்றால், இப்போதிலிருந்தே ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒருநாள் தரவரிசையில் அவரே இன்னமும் பாகிஸ்தானின் நம்பர் 1 வீரராக உள்ளார்.
Ahmed Shehzad said, “If you don’t take Babar Azam in ODIs, how will you win? He is your number one player, and without Babar Azam, it won’t be easy for Pakistan to win.”
— Maaz (@IsThatMaaz) March 3, 2026
வங்கதேச சுற்றுப்பயணம் குறித்து எச்சரித்த ஷெசாத், “வங்கதேச மண்ணில் விளையாடுவது எளிதல்ல. அவர்கள் பாகிஸ்தானுக்குக் கடுமையான சவால்களைக் கொடுப்பார்கள். இக்கட்டான சூழலில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட பாபர் அசாம் போன்ற அனுபவமிக்க வீரர்கள் அவசியம். அவர் வங்கதேசத்திற்குச் செல்லவில்லை என்றால், பாகிஸ்தான் எப்படி வெற்றி பெறும்? நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடும்போது, அவரது பழைய ஃபார்ம் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பாபர் அசாமை உள்ளூர் போட்டிகளுக்கு அனுப்பத் திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஷெசாத், அவரை நேரடியாக வங்கதேச தொடருக்கான ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்திடம் தோற்பதை பாகிஸ்தான் அணியால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால், அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக உள்ளது.
