சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர், தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பான ‘சூப்பர்-8’ சுற்று முடிவடைந்த நிலையில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகளின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளன.

அதன்படி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை (வியாழக்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துடன் மோதுகிறது. இப்போட்டியானது இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது.

இந்நிலையில் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். எனினும், நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இந்திய அணியின் பயிற்சி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

பொதுவாக மாலை 6:00 மணிக்கே பயிற்சியைத் தொடங்கும் இந்திய அணி, நேற்று கிரகண நேரத்தைக் கருத்தில் கொண்டு பயிற்சியைத் தவிர்த்தது.

மாலை 6:47 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைந்த பிறகு, இரவு 7:00 மணி அளவில் வீரர்கள் மைதானத்திற்கு வந்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

தொடரின் முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர்களின் இந்தத் திட்டமிட்ட அணுகுமுறை விளையாட்டு வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.