இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீசிக் கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுடன் உரையாடிய பும்ரா, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவின் உயரத்தைக் குறித்து இந்தியில் ‘குள்ளன்’ (Bauna) என்று கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவியது.

போட்டி முடிந்த பிறகு இது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஷ்வெல் பிரின்ஸிடம் கேட்கப்பட்டபோது, “இதுபற்றி எந்த விவாதமும் இருக்காது. இது இப்போதுதான் என் கவனத்துக்கு வந்தது. களத்தில் நடந்ததால் எந்தப் பிரச்சினையும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று கூறி இந்த விவகாரத்தை அடியோடு மறுத்து, அமைதி காத்தார்.

“>

சர்ச்சைக்குரிய கருத்து குறித்துப் பேச மறுத்த ஆஷ்வெல் பிரின்ஸ், இந்திய அணியின் பந்துவீச்சைப் பாராட்டிப் பேசினார். குறிப்பாக, கொல்கத்தா ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ்  சீரற்று இருந்தபோதும், ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு ‘அற்புதம்’ என்று புகழாரம் சூட்டினார். “பும்ராவின் பந்துவீச்சு அசாத்தியமானது.

அவர் இடைவிடாமல் துல்லியமாகப் பந்துவீசினார். முதல் ஓவர்களில் தடுமாறிய சிராஜ் கூட பின்னர் களம்  கண்டு சிறப்பாக வீசினார்” என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆடுகளத்தில் பந்துகள் சீரற்று எழும்பியதால், பேட்ஸ்மேன்களுக்குச் சிரமமாக இருந்தது என்றும், அடுத்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.