தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி உரையாற்றினார். அப்போது திமுக அரசை ‘தீய சக்தி’ என்றும் ‘ஊழல் சக்தி’ என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் விமர்சித்தார்.
முன்னதாக, கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, திறந்த வாகனத்தில் நின்றபடி தொண்டர்களின் உற்சாக வரவேற்பிற்கு இடையே தவெக கொடியை ஏற்றி வைத்தார்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், “காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பெரும் தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா அமர்வது என மக்கள் இன்று கண்ணீர் சிந்துகின்றனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அவரைப் பலர் கேலி செய்தனர். ஆனால் அவர் ஆட்சியைப் பிடித்த பிறகு, அரசியலில் பெரும் அனுபவம் கொண்டவர்களுக்குக்கூட கோட்டையைப் பிடிப்பது என்பது கனவாகவே இருந்தது” என்று குறிப்பிட்டார்.
திமுகவின் பவளவிழாவைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசிய அவர், “அவர்கள் துருப்பிடித்த வியூகங்களைக் கையில் எடுத்துள்ளனர். பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்டத்தான் தெரியும். அதற்காக அவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது” என்று சாடினார்.
திருவள்ளுவரை மேற்கோள் காட்டி திமுகவை விமர்சித்த விஜய், “திருவள்ளுவர் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், திமுகவைப் பற்றி ஒரு குறள் எழுதியிருப்பார். அதாவது, ‘அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்றுதான் எழுதியிருப்பார்” எனத் தெரிவித்தார்.
மேலும், சமீபகாலமாகத் தவெக குறித்து வெளியாகும் கருத்துக்கணிப்புகள் குறித்துப் பேசிய அவர், “தற்போது வெளிவருபவை கருத்துக்கணிப்புகள் அல்ல; அவை ‘கடுப்புக் கணிப்புகள்’. எத்தனை என்ஜின்கள் வந்தாலும், அரசியலில் ‘டாப் என்ஜின்’ தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான். நமது விசில் சத்தத்தில் தீய சக்திகளும், ஊழல் சக்திகளும் ஓட வேண்டும். தவெக தொண்டர்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது” என்று ஆவேசமாக முழங்கினார்.
