மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார்.

தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காரணமாக லேப்டாப் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து இலவச லேப்டாப் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

இதன் எதிரொலியாக 2019 ஆண்டு முதல் கடந்த மூன்று வருடங்களாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாதாமல் இருப்பதால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார். அதோடு, ‘கடந்த ஆட்சியில் வழங்காதது உள்ளிட்டவையோடு சேர்த்து மொத்தம் 14 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பு காரணமாக 2019ம் ஆண்டு தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.