திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சி கடை வீதியில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாம்பு ஒன்று பள்ளி வளாகத்திற்குள் ஊர்ந்து சென்றது.

இதனை பார்த்த மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். உடனே அந்த பாம்பு ஒரு அறைக்குள் சென்று பதுங்கியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 4 அடி நீளம் உள்ள பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.