அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மண்டியிட்டது. 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, வெறும் 111 ரன்களுக்குச் சுருண்டது. இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் ஐந்து வீரர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

1. இஷான் கிஷன் (ரன் ஏதுமில்லை):

இந்திய ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளித்தவர் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன். அதிரடித் தொடக்கத்தைத் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தித்த 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி ஆட்டமிழந்தார். முதல் ஓவரிலேயே அவர் அவுட் ஆனது இந்திய அணியின் மன உறுதியைக் குலைத்தது.

2. அபிஷேக் சர்மா (15 ரன்கள்):

கடந்த மூன்று இன்னிங்ஸ்களில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியிலாவது நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த அவர், இக்கட்டான சூழலிலும் நிதானத்தைக் காட்டாமல் அவசரப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார். மார்கோ யான்சன் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தது அணியை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

3. வாஷிங்டன் சுந்தர் (11 ரன்கள்):

அனுபவம் வாய்ந்த அக்ஷர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய அவர் 11 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். பந்துவீச்சிலும் 2 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 17 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

4. ஹர்திக் பாண்டியா (18 ரன்கள்):

அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பினார். பந்துவீச்சில் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 45 ரன்களை வாரி வழங்கினார். பேட்டிங்கில் 18 ரன்கள் (17 பந்துகள்) ஆட்டமிழந்தார். இக்கட்டான நிலையில் களமிறங்கிய அவர் இன்னிங்ஸை கட்டமைக்கத் தவறிவிட்டார்.

5. வருண் சக்கரவர்த்தி (1 விக்கெட் – 47 ரன்கள்):

இந்திய அணியின் ‘மிஸ்டரி ஸ்பின்னர்’ வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் சொதப்பினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 47 ரன்களை விட்டுக்கொடுத்தார். டேவிட் மில்லரின் விக்கெட்டை அவர் வீழ்த்தினாலும், தென்னாப்பிரிக்கா 187 ரன்களைக் குவிக்க இவரது ஓவர்களில் வழங்கப்பட்ட ரன்களும் முக்கியக் காரணமாக அமைந்தன. மேலும் தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 4 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தனர்.