தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான படுதோல்விக்குப் பிறகு, இந்திய அணி தனது ஆட்ட முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை உடனடியாக ‘பிளேயிங் லெவனில்’ சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் பலவீனங்களை அம்பலப்படுத்தியதற்காக தென்னாப்பிரிக்க அணிக்குத் தான் நன்றி கூறுவதாக மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். “தென்னாப்பிரிக்காவிற்கு நன்றி, இதன் மூலம் இந்திய அணி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்:
அதன்படி சுழற்பந்து வீச்சை நிதானமாகவும் திறமையாகவும் கையாளக்கூடிய பேட்டர்களை பேட்டிங் வரிசையில் முன்னிலைப்படுத்த வேண்டும். வலைப்பயிற்சியின் போது பேட்டர்களுக்கு அதிகப்படியான ‘ஸ்லோயர் பந்து’களை வீசி பயிற்சி அளிக்க வேண்டும். ஏனெனில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தைக் குறைத்து வீசிய பந்துகளில் இந்திய வீரர்கள் திணறினர்விக்கெட்டுகளை வீழ்த்தும் வல்லமை கொண்ட குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
