தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

சூப்பர்-8 சுற்றின் குரூப்-1 இல் இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

தென்னாப்பிரிக்காவிடம் முதல் போட்டியைத் தோற்றதால், இந்தியா தற்போது பூஜ்ஜியப் புள்ளிகளுடன் உள்ளது. அடுத்ததாக ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

இந்தியா எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம். ஒரு போட்டியில் தோற்றால் கூட, இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வரும். தென்னாப்பிரிக்காவிடம் பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றதால், இந்தியாவின் ‘நெட் ரன் ரேட்’ மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

தென்னாப்பிரிக்க அணி தனது எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் (ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக) வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தால், இந்தியாவின் வேலை எளிதாகும். அப்போது இந்தியா தனது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து எளிதாக அரையிறுதிக்குச் செல்லும்.

ஆனால், ஜிம்பாப்வே அல்லது மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், ரன் ரேட் அடிப்படையில் கடும் போட்டி ஏற்படும். அப்போது இந்தியா மற்ற அணிகளை விட அதிக ரன் ரேட் வைத்திருப்பது கட்டாயமாகும்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தற்போது அபாரமான ஃபார்மில் உள்ளன. எனவே, அவர்களை வீழ்த்துவது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும். ‘மீண்டு வருவதில் கில்லாடி’ எனப் பெயர் பெற்ற இந்திய அணி, சென்னையில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.