சமூக வலைதளங்களில் எப்போதும் துணிச்சலாகக் கருத்துக்களைப் பகிரும் நடிகை வினோதினி வைத்தியநாதன், தற்போது தமிழ்நாட்டுப் பெண்களின் அரசியல் புரிதல் மற்றும் தற்போதைய சமூக நிலை குறித்துப் பதிவிட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவருக்கு வாக்களிக்கும் பெண்களின் மனநிலை குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

தமிழகப் பெண்கள் தைரியமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று கூறும் வினோதினி, அவர்களின் பொது அறிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது,  “28-38 வயதுடைய பெண்கள் குடும்பப் பிரச்சினை வந்தால் சிங்கமாக மாறுகிறார்கள். ஆனால், உலக விஷயங்களைப் புரிந்துகொள்வதில் பின் தங்கியுள்ளனர். ஆசிரியைகளாக இருக்கும் பெண்கள் கூட, இடைவேளையில் வீட்டு விவகாரங்களைப் பேசுவதிலேயே குறியாக உள்ளனர்.

“90-ஸ் கிட்ஸ் பெண்கள் மேக்கப் மேன் யார், கணவரை எப்படி மாற்றலாம், என்ன ரீல்ஸ் போடலாம் என்பதில் தான் ஆர்வமாக உள்ளனர். அமேசான், மீஷோ-வில் பொருட்கள் வாங்க வாங்கிய கடனில் தவிக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, தொகுதி மறுவரையறை, பெரியார், அம்பேத்கர் என எதைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. மாதம் 1000 ரூபாய் வருகிறதா? பொங்கலுக்கு காசு கிடைக்கிறதா? என்ற கணக்கிலேயே நாட்களைக் கடத்துகிறார்கள்.

பெண்கள் விஜய்க்கு வாக்களிப்பதன் பின்னணியில் உள்ள உளவியலை வினோதினி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தான் ரசித்த நடிகர், ஒரு பர்சனல் கிரஷ் (Personal Crush)… அவர் இன்று எதிரிகளால் சூழப்பட்டிருப்பது போலவும், வலியுடன் இருப்பது போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். அவர் வந்தா எல்லாம் மாறிடும்னு நம்புறாங்க. இதில் ‘லாஜிக்’ என்பதை விட ‘மேஜிக்’ தான் அதிகம்.

மேலும், வேட்பாளர் பெயர் கூடத் தெரியாமல், ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போடு விஜய்க்கு வாக்களித்ததாகச் சொல்லும் பெண்களைப் பார்க்கும்போது வியப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஈடாக ஆண்களும் ஏதோ ஒரு நடிகரின் ரசிகர்களாகவோ அல்லது மனைவிக்கு பயந்தவர்களாகவோ இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது விஜய்யால் வந்த பிரச்சினை அல்ல. இன்று அவர் இடத்தில் எந்த மாஸ் ஹீரோ இருந்தாலும் இதுதான் நடக்கும். தமிழ்நாடு ஒரு அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம் 70-80-களோடு முடிந்துவிட்டது எனத் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார் வினோதினி.

மேலும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய வினோதினி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.