தமிழக அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வலுவான நான்கு முனை  போட்டி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டத்தைக் கூட்டும் ‘சினிமா கவர்ச்சி’ ஓட்டாக மாறாது என விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை ஒருசேர அதிர வைத்துள்ளது.

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ஆக்ஸிஸ் மை இந்தியா (Axis My India) வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய கணிப்பில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் (TVK) 120 இடங்கள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் விஜய்யின் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை ‘வெறும் ரசிகர்கள்’ என ஒதுக்கித் தள்ளிய அரசியல் விமர்சகர்கள், இப்போது இந்தக் கணிப்பைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

118 இடங்கள் இருந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலையில், 120 இடங்கள் வரை தவெக-வுக்குக் கிடைக்கும் என்ற கணிப்பு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த அரசியல் பரபரப்புக்கு நடுவே, இசைஞானி இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

1988-ல் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘இது எங்கள் நீதி’ படத்தில் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ என்ற பாடலை, தற்போது இளையராஜா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், “இந்த நாடு காத்திருக்கு” என்ற வரிகள் கொண்ட பாடலை விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்திருப்பது, விஜய்க்கு அவர் வழங்கும் ஆதரவாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம், தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் விஜய், அமைதியாக முருகன் கோவில், சாய்பாபா கோவில் என ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது ஒவ்வொரு நகர்வும் தற்போது தமிழகத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது.