தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதலை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் தேசியக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர மிக முக்கியக் காரணமாக அமைந்தது மொழிப்போர். அந்த வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், திமுகவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி நிர்வகிக்கும் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளதால், இதனை ஒரு கட்சி சார்ந்த திரைப்படமாகவே திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும், “தமிழுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்துக்கு இனி இந்த ஜென்மத்துக்கு நீங்க ஆட்சிக்கே வர முடியாது” என்ற வசனம் அடங்கிய நியூஸ் கார்டை அவர் பகிர்ந்துள்ளார்.
சாணக்கியா செய்தி உண்மையா ?
பார்த்தவர்கள் video போட்டு விடுங்க பா .
இந்த #Parasakthi படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை விண்ணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை . pic.twitter.com/iLdhm7daUD— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 10, 2026
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “இந்தச் செய்தி உண்மையா? பார்த்தவர்கள் வீடியோ பதிவிடுங்கள். பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். அதனால் உழைத்த காசை வீணாக்க வேண்டாம் என நான் படம் பார்க்கவில்லை.” இந்த அதிரடிப் பதிவு திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிப் பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற விவகாரங்களில் மாணிக்கம் தாகூர் அதிரடியான கருத்துகளை முன்வைத்து வந்தார். மேலும், அவர் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது நேரடியாக ‘பராசக்தி’ படத்தையும், திமுக தலைமையையும் சீண்டும் வகையில் பதிவிட்டுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவினர் சமூக வலைதளங்களில் மாணிக்கம் தாகூருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தை முன்வைத்து எழுந்துள்ள இந்த மோதல், வரும் காலங்களில் கூட்டணி உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
