தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் சேர்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

“நிதி நெருக்கடியைச் சந்திக்கும் மாணவர்கள், சொந்தமாக மடிக்கணினி வாங்க முடியாதவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று குறிப்பிட்டு, போலியான தகவல்கள் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தத் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அந்த லிங்க்குகளைக் கிளிக் செய்து மக்கள் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இலவச மடிக்கணினி திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் தற்போது வரையில் வெளியாகவில்லை. எனினும், அரசு சார்பில் போலியாகப் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவே, இந்தத் தகவலைத் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்புப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோல நிதி உதவி அல்லது அரசு சலுகைகள் தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல், எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.