தமிழகக் காவல்துறை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அதில், திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை அடுத்து, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் காமினிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாநகரக் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகத்திலும், தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீடு மற்றும் மாவட்ட திமுக அலுவலகத்திலும் அங்குலம் அங்குலமாகத் தீவிர சோதனை நடத்தினர்.

அமைச்சர்களின் இருப்பிடங்கள் மட்டுமின்றி, திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கும் சல்லடை போட்டுத் தேடப்பட்டது. சோதனை முடிவில் இது வெறும் புரளி எனத் தெரியவந்த போதிலும், இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
