தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
25 பந்துகளை எதிர்கொண்ட ஹார்திக், 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் குவித்து இந்திய அணியை 231 ரன்கள் என்ற பெரிய ஸ்கோருக்கு உயர்த்தினார். இதன் மூலம் யுவராஜ் சிங்கிற்கு பிறகு, டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் பதிவு செய்த இரண்டாவது வேகமான அரைசதத்தை அவர் பெற்றார்.
பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக், ஆபத்தான தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸை அவுட் செய்து எதிரணி ரன்களை கட்டுப்படுத்தினார். இறுதியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பின் பேசிய ஹார்திக், “இது என்னுடைய நாள் என்று உணர்ந்தேன். முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க முயற்சிப்பேன் என்று முந்தைய நாளே என் அணியினரிடம் தெரிவித்திருந்தேன். அதற்கு தேவையான நம்பிக்கை எனக்குள் இருந்தது,” என்றார்.
View this post on Instagram
மேலும், “நான் ஆட்ட நாயகன் விருதுகளுக்காக விளையாடுவதில்லை. என் நாட்டுக்காக வெற்றி பெறுவதற்காகவே நான் எப்போதும் விளையாடுகிறேன்,” என்றும் தெரிவித்தார்.
இந்தப் போட்டியை காண ஹார்திக்கின் காதலி மஹைகா சர்மா மைதானத்தில் இருந்தார். அரைசதம் கடந்தபின், ஹார்திக் அவரை நோக்கி பறக்கும் முத்தம் அனுப்பியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஜார்ஜ் லிண்டே வீசிய 14-ஆவது ஓவரில் நான்கு பந்துகளில் 20 ரன்கள் எடுத்த ஹார்திக், போட்டியின் வேகத்தை முழுமையாக இந்திய பக்கம் திருப்பினார். இதுகுறித்து அவர், “முன்னதாக அவர் எனக்கு நன்றாக பந்து வீசியது நினைவில் இருந்தது. ஆனால் இன்று சூழ்நிலை என் பாணிக்கு ஏற்றதாக இருந்தது. கணக்கிட்டு அபாயத்தை எடுத்தேன்; அது வெற்றியாக முடிந்தது,” என்றார்.
இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய நான்கு போட்டிகளில் ஹார்திக் இரண்டு அரைசதங்களுடன் மொத்தம் 142 ரன்கள் எடுத்தார். மேலும் பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
