அரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி பெற்று வந்த 17 வயது சிறுமிக்கு அவரது பயிற்சியாளரே மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளார். சுமார் 4 மாதங்களுக்கு முன்பு, விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறையிலேயே அந்தச் சிறுமியைப் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்தச் சிறுமி கர்ப்பமான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு எதிர்பாராத விதமாக கருக்கலைப்பு ஏற்பட்டு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. ரத்தப்போக்கு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான், இத்தனை நாட்களாக மறைக்கப்பட்டிருந்த இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமி தைரியமாக அளித்த புகாரின் பேரில், அந்தப் பயிற்சியாளரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான ‘போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பயிற்சியாளரே இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது விளையாட்டு உலகையே அதிர வைத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பயிற்சியாளரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
