தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்கான் கொட்டாய் மற்றும் காராஜி நகர் குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இன்றளவும் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று குடிநீரை எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.