யுனிவர்சல் பேமெண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலமாக பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) அறிவித்துள்ளது.

இதுவரை பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமியம், கடன் தவணை உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது. தற்போதைய மாற்றத்தின்படி, இத்தகைய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் உத்தரவாதமான பரிவர்த்தனைகளில், ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை அனுப்பலாம் என NPCI அறிவுறுத்தியுள்ளது.

புதிய பரிவர்த்தனை வரம்புகள்:

பங்குசந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமியம், கடன் தவணை, அரசுத் தொகைகள் – ₹2 லட்சம் ⟶ ₹10 லட்சம்

கிரெடிட் கார்டு நிலுவை தொகை செலுத்துதல் – ₹2 லட்சம் ⟶ ₹6 லட்சம்

நகை வாங்குதல் – ₹1 லட்சம் ⟶ ₹6 லட்சம்

மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டவை:

தனிநபர் பண பரிவர்த்தனை (பிறர் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவது) – ₹1 லட்சம்

கல்வி கட்டணம், மருத்துவ செலவுகள், IPO முதலீடு – ₹5 லட்சம்

இந்த மாற்றங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் பெரிய தொகைகளை பாதுகாப்பாகவும் எளிதாகவும் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதே நோக்கம் என்று NPCI தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், வணிக, நிதி துறைகளில் செயல்திறன் அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.