சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த 1.54 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுக்கும், 73 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைத்த மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய இணையதளம் அமைத்திருக்கும் தலைவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கட்சியின் அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் இளைஞர் அணி துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே வேளையில், திமுக கூட்டணியில் இருந்து கொண்டு பல பதவிகளைப் பெற்றுவிட்டு, தற்போது திடீரென அணி மாறியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த கூட்டத்தில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக தொண்டர்களின் உழைப்பால் வென்றுவிட்டு, தற்போது நன்றி உணர்ச்சியின்றி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் இந்த துரோகப் போக்கை இக்கூட்டம் கடுமையாகச் சாடியுள்ளது.

மேலும், புதிய அரசு பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் எனச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், முதலமைச்சர் வெறும் வெற்று விளம்பர ‘ரீல்ஸ்’கள் மூலம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பாமல், பத்திரிகையாளர்களைச் சந்தித்து ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.