தில்லியின் வடக்கு நரேலா பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் அருகே வியாழக்கிழமை காலை சொத்து வியாபாரி பிரமோத் தாஹியா மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹரியாணாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த அவர், காலை 7 மணியளவில் உடற்பயிற்சிக் கூடம் அருகே இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த பிரமோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சியில், ஒருவர் தனது சட்டைப் பையில் இருந்து துப்பாக்கியை எடுப்பதும், தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதும் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. போலீஸாரின் முதற்கட்ட தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் சுமார் 16 முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு மூவரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. தகவல் அறிந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.
नरेला थाना क्षेत्र के बकानेर गांव में the jym के बाहर प्रमोद नाम के प्रॉपर्टी डीलर को मारी गोली, हमलावरो का सीसीटीवी आया सामने @aajtak @ABPNews @ZeeNews @ZeeDNHNews @PTI_News @ians_india @CPDelhi @dcp_outernorth pic.twitter.com/5YKilBIvic
— @Journalist Sonu (@IshuSonu1) September 3, 2026
இந்தக் கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததுடன், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கொலைக்கு பணம் பறிப்பு முயற்சி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, குற்றவாளிகளை அடையாளம் காணவும் அவர்கள் தப்பிச் சென்ற பாதையை கண்டறியவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த பிரமோத் தாஹியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
