மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அசோக் சவுக் பகுதியில் செல்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு வினோத காட்சி காணக் கிடைக்கிறது. அங்கு ஒரு வீட்டின் பால்கனி வழியாக கட்டப்பட்டுள்ள இந்தோரா-திகோரி மேம்பாலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அசாதாரண காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த 9.2 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலம், மோசமான திட்டமிடலுக்கு உதாரணமாக அமைந்துள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த மேம்பாலம் நகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க வேண்டி கட்டப்பட்டாலும், இந்த வினோத கட்டுமானம் பொதுமக்களிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த NHAI அதிகாரிகள், அந்த வீட்டின் பால்கனி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் அமைந்துள்ளதாகவும், மேம்பால கட்டுமானத்தின் போதே இதுபற்றி நாக்பூர் நகராட்சியிடம் (NMC) தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனால், நாக்பூர் நகராட்சி அதிகாரிகள், வீட்டின் உரிமையாளரான பிரவீன் பத்ரேவுடன் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர். அவர், தனது வீட்டின் பால்கனி வழியாக மேம்பாலம் செல்வதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பதால், மேம்பாலம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டது.

வீட்டின் உரிமையாளர், இது தனது பயன்பாட்டு இடம் இல்லை என்றும், மேம்பாலம் இயங்கத் தொடங்கும்போது ஒலி தடுப்பு ஏற்பாடுகள் செய்ய உள்ளதாகவும் கூறினார். இதேபோல், அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி மேம்பாலம் வைரலானது குறிப்பிடத்தக்கது.