தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டதில் இருந்தே அதன் தீவிர ஆதரவாளராக வலம் வந்தவர் நடிகர் தாடி பாலாஜி. எந்த மேடையாக இருந்தாலும் விஜய்யின் அரசியலைப் புகழ்ந்து பேசி வந்த அவருக்கு, கட்சியில் ஏதாவது ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோதும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாதது அவரை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விரக்தியின் காரணமாக தவெக-விலிருந்து விலகிய அவர், தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள “லட்சிய ஜனநாயக கட்சி” (LJK)-யில் இணைந்துள்ளார்.

​வெறுமனே கட்சியில் இணைந்ததோடு மட்டுமல்லாமல், தவெக-வின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் தொடங்கிய பாலாஜிக்கு, லட்சிய ஜனநாயக கட்சித் தலைமை உடனடியாக ஒரு பவர்ஃபுல் பதவியை வழங்கியுள்ளது. அக்கட்சியின் “பரப்புரை பொதுச்செயலாளர்” ஆக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 2026 தேர்தலைக் குறிவைத்து களமிறங்கியுள்ள சார்லஸ் மார்ட்டினின் கட்சிக்கு, தாடி பாலாஜியின் வருகை ஒரு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.