தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரே மாதத்தில் முத்துப்பாண்டி தனது மனைவியின் 30 பவுன் நகையை விற்று அந்த பணத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் உறவினர்களிடம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். மனோன்மணி தனது கணவரின் செயல் குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் நான்கு முறை புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்துப்பாண்டி தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். உடனே மனோன்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் மனோன்மணி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மனோன்மணியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மனோன்மணி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
