இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரம் இந்த வசதிகளால் வாடிக்கையாளர்கள் பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள். பொதுவான பிரச்சனை என்னவென்றால் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் பணம் செலுத்தப்படவில்லை என்பதுதான். இது குறித்து வங்கியில் புகார் தெரிவிக்கும் பொழுது வங்கி அதிகாரிகள் சில நாட்கள் காத்திருக்கும் படி கூறுவார்கள்.

இழக்கப்பட்ட பணம் சிறிதாக இருந்தால் பெரிய பிரச்சினை கிடையாது. ஆனால் பல லட்சம் இருந்தால் பணம் வருமா? வராதா ?என்ற பயம் நமக்கு இருக்கும். சில வங்கிகள் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறி வருகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு உள்ளது. சம்பந்தப்பட்ட வங்கிகள் புகாரை கேட்கவில்லை என்றால் அதை எப்படி ரிசர்வ் வங்கியிடம் புகார் செய்யலாம் என்பதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் https://cms.rbi.org.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். பிறகு ’File a Complaint’ என்ற பிரிவில் கிளிக் செய்யவும். கேப்ட்சா குறியீட்டை நிரப்பிய பிறகு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, அதற்கு அனுப்பப்படும் OTP நம்பரையும் பதிவிட்டு சமர்ப்பிக்கவும். பிறகு, புகார்தாரரின் பெயர், மொபைல் நம்பர், மின்னஞ்சல் ஐடி, புகார் வகை, உங்கள் மாநிலத்தின் பெயர், முகவரி, பின் நம்பர், புகார் செய்யும் வங்கியின் பெயர், வங்கியின் கிளை போன்ற தகவல்களைக் கொடுத்து சமர்ப்பிக்கவும். பின்னர் புகாரை தாக்கல் செய்யும் தேதி மற்றும் கேப்ட்சாவை நிரப்ப வேண்டும்.  புகாருக்கான நகலை பதிவேற்றம் செய்ய விரும்பினால், அதைச் செய்த பிறகு Submit பட்டனை கிளிக் செய்யவும்.