2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது வெறும் கிரிக்கெட் போட்டி என்பதைத் தாண்டி, அரசியல் கலந்த ஒரு “விஷத்தன்மை” வாய்ந்த நாடகமாக மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருமானம் முழுவதும் இந்தப் போட்டியையே சார்ந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாத நிலையிலும் பணத்திற்காகவே இந்தப் போட்டி நடத்தப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நவீன கிரிக்கெட்டில் விளையாட்டுத் திறனை விட பணமே ஆதிக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள ஆதர்டன், ஐசிசி தற்போது ஒரு ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனம் போலச் செயல்படுவதாகச் சாடியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போன்ற வணிக ரீதியிலான போட்டிகளை விட, மும்பையில் நடந்த நேபாளம் – இத்தாலி இடையேயான போட்டியே தனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்ததாக அவர் கூறினார்.

இதனால் சாதாரண மக்கள் விளையாடி வெற்றி பெற்ற அந்தப் போட்டியில்தான் உண்மையான கிரிக்கெட் உணர்வு இருந்ததாகவும், அரசியல் மற்றும் வணிக லாபங்களுக்காக கிரிக்கெட்டின் ஆன்மா சிதைக்கப்படுவதாகவும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.