பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசிக்கும் பிரித்வி என்பவர், தனது அக்கா பிரபுல்லாவிடம் ₹9.5 லட்சம் கைக்கடன் வாங்கியுள்ளார். இதற்காக மாதம் ₹75,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகப் பண நெருக்கடியால் பணம் செலுத்தக் கால அவகாசம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கா பிரபுல்லா, அவரது கணவர் சலீம் ஷேக் மற்றும் கூட்டாளியுடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பிரித்வியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு பிரித்வியையும் அவரது கணவரையும் சரமாரியாகத் தாக்கியதோடு, “₹500 கொடுத்தால் உங்களைக் கொல்ல எங்களிடம் ஆட்கள் இருக்கிறார்கள்” என மிரட்டியுள்ளனர்.
அதோடு விடாமல், இருவரையும் காரில் கடத்திச் சென்று நாகரபாவியில் உள்ள சலீம் ஷேக்கின் வீட்டில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் எச்சரித்து அனுப்பப்பட்ட நிலையில், பிரித்வி அளித்த புகாரின் பேரில் சந்திரா லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அக்கா பிரபுல்லா, அவரது கணவர் சலீம் மற்றும் கூட்டாளியைக் கைது செய்துள்ளனர்.
