இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்குச் சுற்றுலா சென்ற லூயிஸ் புல்மேன் என்ற பிரிட்டிஷ் பயணி, அந்த மாநிலத்தை ‘பகீர்’ என்று சொல்லும் வகையில் “பக்கா ஏமாற்று மாநிலம்” எனச் சாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தவர்களுக்குத்தான் அவர் சொன்னதன் உண்மையான அர்த்தம் புரிந்தது.
மேகாலயா மக்களின் அதீத அன்பையும், விருந்தோம்பலையும் கிண்டலாகவும், நெகிழ்ச்சியாகவும் அவர் “ஸ்கேம்” (Scam) எனக் குறிப்பிட்டுள்ளார். மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற வழிகாட்டி 7 மணிநேரம் கூடவே இருந்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்துவிட்டுப் பணம் வாங்க மறுத்தது, லிப்ட் கேட்ட இடத்தில் ஒரு தம்பதியினர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் தங்கவைத்து ருசியான உணவுகளைக் கொடுத்தது எனத் தனக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
“இங்கே கார் ஓட்டிச் செல்பவர்கள் யாராவது கஷ்டப்பட்டால் உடனே இறங்கி வந்து உதவி செய்கிறார்கள், என்னால் நிம்மதியாகக் கூட கஷ்டப்பட முடியவில்லை” என அவர் ஜாலியாகக் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“இப்படியொரு ஏமாற்று வேலை என்றால் எங்களுக்கும் ஓகேதான்” என இணையவாசிகள் பாராட்டி வரும் நிலையில், அந்தப் பயணிக்கு அடைக்கலம் கொடுத்தவர்களில் ஒருவர் மேகாலயாவின் அமைச்சர் என்பது கூடுதல் ஆச்சரியத்தைத் தந்துள்ளதோடு, ‘மேகங்களின் உறைவிடம்’ என அழைக்கப்படும் மேகாலயாவின் நற்பெயரை உலகளவில் உயர்த்தியுள்ளது.
