உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தில், ரயிலில் பயணித்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் கன்வாரியாக்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) மூன்று கன்வாரியாக்களை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின்போது, மணிப்பூரில் பணியமர்த்தப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான் கௌதம், தனது 12 வயது மகனுடன் பிரம்மபுத்ரா மெயில் ரயிலில் பயணம் செய்ய மிர்சாபூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். டிக்கெட் கவுண்டருக்கு அருகில் அமர்ந்து ரயிலுக்கு காத்திருந்தபோது, அங்கு வந்த ஏழு கன்வாரியாக்கள் கொண்ட குழுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் விரைவில் சண்டையாக மாற, அந்தக் குழுவினர் ஜவானை சுற்றிவளைத்து அடித்து தாக்கினர். இது குறித்து அவரது மகன் புகார் அளித்தார்.

அதன்பேரில், RPF அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சத்யம், அபிஷேக் சாஹு (மிர்சாபூர்) மற்றும் அபய் திவாரி (கஜ்ரஹாவா போகாரா) ஆகிய மூன்று கன்வாரியாக்களை கைது செய்தனர். மேலும், கூடுதல் கட்டண டிக்கெட் விதிமுறைகளின் கீழ் நான்கு சிறிய யாத்ரீகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், காவி உடையணிந்த பக்தர்கள் ஜவானை சூழ்ந்தபடி தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது.

 

இதுகுறித்து RPF இன்ஸ்பெக்டர் சாமன் சிங் தோமர் கூறியதாவது, “சிஆர்பிஎஃப் வீரர் தவறான வார்த்தைகள் பயன்படுத்தியதாக கன்வாரியாக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதான் தகராறுக்கு காரணமாகும். மேலும் கைது செய்யப்பட்ட மூவருக்கும் பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் ரயில்வேப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நடத்தை குறித்தும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.