தமிழ் திரையுலகின் இரு பெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, இன்பநிதி தயாரிக்கிறார்.
‘பதினாறு வயதினிலே’, ‘இளமை ஊசலாடுகிறது’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இந்த ஜோடி, மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் ரகசியமாக நடைபெற்று முடிந்தது. இப்படத்திற்காக ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருமே சம்பளம் வாங்காமல், படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் பங்காகப் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் மீண்டும் ரஜினியை இயக்குவதுடன், கமலும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Two Legends. One Frame.
Next update at 12:07 tomorrow. ⏳#KHxRK #RedGiant17 ✨ pic.twitter.com/FrAA4MdBMa
— Red Giant Movies (@RedGiantMovies_) February 19, 2026
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் நேற்று இரவு 7.12 மணிக்கு வெளியிட்டது. இந்த நேரத்தில் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்துள்ளது. கமலின் பிறந்த தேதியான ‘7’ மற்றும் ரஜினியின் பிறந்த தேதியான ’12’ ஆகியவற்றை இணைக்கும் விதமாக இந்த நேரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் அடுத்த அறிவிப்பு இன்று மதியம் 12.07 மணிக்கு (ரஜினி – கமல் பிறந்த தேதிகளின் வரிசையில்) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஜினிகாந்த் ‘ஜெயிலர்-2’ படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இப்பணிகள் முடிந்த கையோடு, வரும் மார்ச் மாதம் முதல் தனது 173-வது படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதனை ‘டான்’ பட புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
