கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இது கேரளாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சிதைக்கும் முயற்சி என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தில், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்துப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டது. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான போதிலும், மத்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றது. தற்போது விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், கமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. நேற்று வெளியான இதன் ட்ரெய்லரில்: இந்துப் பெண்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது, பலவந்தமாக மாட்டுக்கறி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் பாகத்தைப் போலவே இதிலும் மத வெறுப்பைத் தூண்டும் வசனங்களும், சர்ச்சைக்குரிய காட்சிகளும் இடம்பெற்றிருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் மற்றும் சமூக நீதி பேசும் திரைப்படங்களுக்குத் தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போடும் நிலையில், இத்தகைய சர்ச்சைக்குரிய படங்களுக்கு மட்டும் தாராளமாகச் சான்றிதழ் வழங்கப்படுவது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் படத்திற்கும் தேசிய விருதுகள் வழங்கப்படலாம் எனச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளதாவது: “வெறுப்பைத் தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.
வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. அமைதிப் பூங்காவான கேரளாவைப் பயங்கரவாதத்தின் மையமாகச் சித்தரிக்க முயலும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
