உணவு வீணாவதைத் தடுப்பதோடு, வீதியில் திரியும் வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கும் வகையில் டெல்லி இளைஞர் ஒருவர் மேற்கொண்டு வரும் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட தட்டுகள் மற்றும் கப்புகளுக்கு இடையே அமர்ந்திருப்பது காணப்படுகிறது. அவர் அங்கு வீணாகக் கிடக்கும் உணவுகளில், சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள துண்டுகளை மட்டும் மிகக் கவனமாகத் தனியாகப் பிரித்தெடுத்துச் சேகரிக்கிறார்.

இவ்வாறு சேகரிக்கப்படும் உணவுகளை வீதியில் பசியுடன் திரியும் பசுக்கள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு அவர் உணவாக வழங்கி வருகிறார். ‘உணவு விலைமதிப்பற்றது; அதனைச் சாதாரணமாகக் குப்பையாகக் கருதாதீர்கள்’ என்ற குறிப்புடன் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, அந்த நெகிழ்ச்சிக்குரிய இளைஞர் ஆசுதோஷ் என்பது தெரியவந்தது. இவர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப்பணித் தேர்வுகளுக்காக தீவிரமாகத் தயாராகி வரும் மாணவர் ஆவார்.

 

View this post on Instagram

 

A post shared by The Better India (@thebetterindia)

தனது கடினமான படிப்புக்கு மத்தியிலும், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் இத்தகைய அறச்செயல்களைச் செய்வதை அவர் தனது அன்றாடக் கடமையாகக் கொண்டுள்ளார். இது ஏதோ விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட செயல் அல்ல என்றும், நீண்டகாலமாக அவர் இதனைத் தனது வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும் அவருடன் பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் ஆசுதோஷின் தன்னலமற்ற செயலைப் பாராட்டி வருகின்றனர். “பசுக்களுக்கு உணவளிக்காமல் அவை பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதை வேடிக்கை பார்க்கும் சமூகத்தில், இவர் ஒரு முன்னுதாரணம்” என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் உணவு வீணாவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த இளைஞரின் செயல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ‘மனிதநேயம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் உரியது’ என்பதை ஆசுதோஷ் மெய்ப்பித்துள்ளார்.