கிதோரா கிராமத்தில் உள்ள தங்க நகைக்கடையில் நான்கு பேர் கொண்ட கொள்ளையர் கும்பல் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டு, கொள்ளையர்களில் மூன்று பேரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். நான்காவது கொள்ளையன் தப்பிச் சென்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, தங்க நகை வியாபாரி மற்றும் அவரது மகனை கொள்ளையர்கள் சுற்றி வளைத்ததாகவும், தப்பிக்க முயன்றபோது அவர்கள் துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், மூன்று கொள்ளையர்களை பிடித்து கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது.
தகவல் கிடைத்தும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்ததாக கூறி, கிராம மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், சாலையை மறித்து போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
यूपी के जिला बदायूं में 4 बदमाशों ने ज्वेलरी शॉप लूट ली। बदमाशों ने हथियार दिखाकर भागना चाहा। पब्लिक ने हिम्मत दिखाकर 3 बदमाश पकड़ लिए। उन्हें इतना पीटा कि सिर फट गए। चौथा बदमाश भाग निकला। pic.twitter.com/7mK25paMKF
— Sachin Gupta (@SachinGuptaUP) December 20, 2025
காயமடைந்த மூன்று கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்து, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட நகை வியாபாரி, தப்பிச் சென்ற நான்காவது கொள்ளையன் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பணத்துடன் தப்பியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் ஹிருதயேஷ் கதேரியா கூறுகையில், “கிதோரா கிராமத்தில் உள்ள நகைக்கடையில் நான்கு கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். கிராம மக்கள் மூன்று பேரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்றார்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய நான்காவது கொள்ளையனை பிடிக்க சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விசாரித்த பின், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
