தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைப் போல, குஜராத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதன்படி, சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத்தில் அதிக அளவில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் மொத்தம் 73.73 லட்சம் பேர் (14.50%) வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு முன், குஜராத்தில் 5 கோடி 8 லட்சத்து 43 ஆயிரத்து 436 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 4 கோடி 43 லட்சத்து 70 ஆயிரத்து 109 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நீக்கப்பட்ட வாக்காளர்களில், 18.07 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 9.69 லட்சம் பேர் இருப்பிடம் தெரியாதவர்கள், 40.25 லட்சம் பேர் நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் 3.81 லட்சம் பேர் இரு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஹரீத் சுக்லா தெரிவித்துள்ளார்.
