சென்னை மாவட்டம் டிபி சத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகர் முன்னாள் ரவுடியுமான புல்க்கான் என்னும் ராஜ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த ராஜ்குமாரை தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவன், யுவனேஷ் என்ற கல்லூரி மாணவர், சாய்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு யுவனேஷின் தந்தை செந்தில் குமாரை ராஜ்குமார் வெட்டி கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பழிக்கு பழியாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு யுவனேஷ் ராஜ்குமாரை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.