மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 20 நாட்களாக நீடித்து வரும் இந்த மோதலில், நேற்று இரவு பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது நடத்திய கோரத் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான JF-17 மற்றும் F-16 போர் விமானங்கள் காபூல் வான்பரப்பிற்குள் நுழைந்து சரமாரியாகக் குண்டுகளை வீசின. வெறும் 23 நிமிட இடைவெளியில் காபூலில் உள்ள மிக முக்கியமான 5 இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆப்கான் பாதுகாப்பு அமைச்சக குடியிருப்புப் பகுதி, GDI உளவுத்துறை தலைமையகம் ஆப்கான் அதிபர் மாளிகை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள். காபூல் விமான நிலையம் அருகே உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை போன்றவைகள் தரைமட்டமானதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. புனிதமான ரமலான் மாதத்தில் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து வருகிறது. துபாய் போன்ற வளைகுடா நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான இந்தப் போர் ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

நாங்கர்ஹார் மாகாணத்திலும் பாகிஸ்தான் குண்டுவீச்சு நடத்திய போதிலும், அங்கிருந்து உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் எல்லையில் இரு நாடுகளும் தங்களது படைகளைக் குவித்து வருவதால் போர் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.