ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் தரைமட்டமானதோடு, சுமார் 250 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் தெரிவித்துள்ளார். “மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது கொடூரமான காட்டுமிராண்டித்தனம்” எனத் தாலிபான் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தற்போது மூன்றாவது வாரமாகத் தீவிரமடைந்துள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ அல்லது மருத்துவமனையையோ தாங்கள் இலக்கு வைக்கவில்லை என்றும், பயங்கரவாதத் தளங்களை மட்டுமே தாக்கியதாகவும் பாகிஸ்தான் அரசு இந்தச் செய்தியை மறுத்துள்ளது.
இந்தத் தாக்குதல் தங்களின் இறையாண்மையை மீறிய செயல் என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தாலிபான் அரசு எச்சரித்துள்ளதால் ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.
