இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றது முதல், இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர் சரிவுகளையும், பல மோசமான சாதனைகளையும் படைத்து வருகிறது. கடந்த கால பயிற்சியாளர்களின் சாதனைகளை ஒப்பிடுகையில், கம்பீரின் கீழ் இந்திய அணி மிகவும் பலவீனமான அணியாக உருமாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கம்பீர் பதவியேற்ற பிறகு இந்திய அணி சந்தித்த பின்னடைவுகள் மற்றும் மோசமான சாதனைகளின் தொகுப்பு இதோ:

டெஸ்ட் கிரிக்கெட்டில் நேர்ந்த அவமானங்கள்:

நியூசிலாந்துக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா. அத்துடன், டெஸ்ட் வரலாற்றிலேயே முதல்முறையாக 3-0 என ‘ஒயிட்வாஷ்’ செய்யப்பட்டு படுதோல்வியைத் தழுவியது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 46 ரன்களுக்குச் சுருண்டு, சொந்த மண்ணில் ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களை எடுத்த மோசமான சாதனையை இந்தியா பதிவு செய்தது.

47 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sun News Tamil (@sunnews)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 408 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை இந்தியா முதல்முறையாகப் பதிவு செய்தது. WTC இறுதிப்போட்டி: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, கம்பீரின் வருகைக்குப் பிறகு அடுத்தடுத்த தோல்விகளால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

தரவரிசையில் சரிவு: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்திற்கும், WTC புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானுக்குக் கீழ் 6-வது இடத்திற்கும் இந்தியா அதலபாதாளத்திற்குச் சரிந்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடர்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை உடனான ஒருநாள் தொடரிலும், முதல்முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.

வெற்றியற்ற ஆண்டு: சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாத நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இதர மோசமான சாதனைகள்:

19 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூருவிலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவிலும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்னிலும் இந்தியா டெஸ்ட் போட்டிகளைத் தோற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது. மேலும், 92 வருட டெஸ்ட் வரலாற்றில் 350-க்கும் மேற்பட்ட ரன்களைப் பாதுகாக்கத் தவறியது இது இரண்டாவது முறையாகும்.

மேலும் முன்னாள் பயிற்சியாளர்களின் காலத்தில் வலுவாக இருந்த இந்திய அணி, தற்போது அடிப்படைத் திறன்களிலும், வியூகங்களிலும் தடுமாறி வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.