மகாராஷ்டிர மாநிலம் போங்காவலி பகுதியில், சட்டத்தையும் சமூகப் பொறுப்பையும் முற்றிலும் மறந்து 16 வயது நிரம்பிய பள்ளிச் சிறுமிக்கு அவளது சொந்தப் பெற்றோரே முன்னின்று பால விவாகம் குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ள நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கையில் புத்தகப் பையை ஏந்திப் பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பருவத்தில், அச்சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, அவளது எதிர்காலத்தையே முடக்கும் வகையில் இந்தச் சட்டவிரோதத் திருமணத்தை உறவினர்கள் ஒன்றிணைந்து நடத்தி முடித்துள்ளனர்.

சமூகத்தில் இன்னும் வேரூன்றியிருக்கும் மூடநம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக, சிறுமியின் பெற்றோரும், மாப்பிள்ளை வீாதாரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இந்தத் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்துள்ளனர்.

சிறுமியின் எதிர்காலக் கனவுகளையும், அவளது உரிமைகளையும் முற்றிலுமாக நசுக்கிய இந்தச் சம்பவம் குறித்துக் குழந்தைகள் நல அமைப்பிற்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலைப் பெற்ற உடனேயே விரைந்து செயல்பட்ட அதிகாரிகள், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

விசாரணையில் சிறுமிக்குக் கட்டாயப்படுத்தி பால விவாகம் செய்து வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருமணத்தை முன்னின்று நடத்திய சிறுமியின் பெற்றோர், மணமகன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் உட்பட மொத்தம் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிஞ்சுச் சிறுமியின் வாழ்க்கையைப் பாழாக்க முயன்ற இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.