சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மக்களின் ‘ஆர்வத்தை’ முதலாக்கி, மிக வினோதமான முறையில் ரூ.8.5 கோடிக்கும் அதிகமாகச் சுருட்டியுள்ள ஒரு அதிர்ச்சி ஆன்லைன் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் இயங்கி வந்த ஒரு பிரபல்யமான பக்கம், “ஆகஸ்ட் 25 அன்று ஒரு பேரதிர்ச்சிகரமான உண்மை அல்லது ரகசியம் வெளிவரப் போகிறது” என்று தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வந்தது. அந்த ரகசியத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமானால், தங்கள் பயோவில் இருக்கும் பிரத்யேக லிங்கை கிளிக் செய்து ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் என அந்தப் பக்கத்தின் உரிமையாளர் ஆசைகாட்டியுள்ளார்.

மேலும் “வெறும் 500 ரூபாய் தானே, அப்படி என்னதான் அந்த ஆகஸ்ட் 25-ல் நடக்கப் போகிறது?” என்ற தீவிரமான ஆர்வக்கோளாறில், லட்சக்கணக்கான நெட்டிசன்கள் அந்த லிங்கை கிளிக் செய்து தலா ரூ.500 வீதம் பணத்தை அள்ளி இறைத்துள்ளனர். இப்படிச் சிறுகச் சிறுகச் சேர்ந்த தொகை, இறுதியில் சுமார் 8.5 கோடி ரூபாயைத் தாண்டி அந்த மோசடி நபரின் வங்கிக் கணக்கிற்குச் சென்று சேர்ந்துள்ளது.

ஆனால், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி வந்தபோது, அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த ஒரு பெரிய அறிவிப்போ அல்லது ரகசியமோ வெளியாகவில்லை. மாறாக, மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டிருந்தது மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தது.

மக்களின் உளவியலையும், புதிய விஷயங்களை உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் மூலதனமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ரூ.8.5 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி, இணைய உலகைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொந்தளித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்துச் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இதனால் இணையத்தில் கண்மூடித்தனமாக வரும் லிங்க்குகளையும், விளம்பரங்களையும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற ஆசைகாட்டும் சைபர் மோசடிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நிபுணர்கள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

“>