பர்ஃப்யூம் பயன்படுத்தி முடித்த பிறகு அதன் அழகான கண்ணாடிப் பாட்டிலை பலரும் குப்பையில் போட்டு விடுகின்றனர். ஆனால் அந்த பாட்டில்களை சற்று சுத்தம் செய்து, வீட்டின் அலங்காரத்துக்கும் அன்றாடப் பயன்பாட்டுக்கும் மீண்டும் பயன்படுத்தலாம். குறிப்பாக அழகான வடிவமைப்பு கொண்ட பாட்டில்களை அலங்காரப் பொருட்களாக மாற்றுவது வீட்டுக்கு தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும்.

முதலில், காலி பர்ஃப்யூம் பாட்டிலை நன்றாக சுத்தம் செய்து சிறிய பூந்தொட்டி போல பயன்படுத்தலாம். அதில் சிறிய செயற்கை பூக்கள் அல்லது தண்ணீரில் வளரக்கூடிய சிறிய செடிகளை வைத்து மேசை, அலமாரி போன்ற இடங்களில் அலங்கரிக்கலாம்.

அதேபோல், அழகான பாட்டில்களை அறை அலங்காரப் பொருள் அல்லது சிறிய வாசனை திரவியப் பாட்டிலாக மாற்றலாம். பாட்டிலின் வடிவமைப்புக்கு ஏற்ப அலங்காரக் கற்கள், ரிப்பன் போன்றவற்றைச் சேர்த்து புதிய தோற்றம் கொடுக்கலாம். சில பாட்டில்களை சிறிய அலங்கார விளக்குகளாகவும் மாற்ற முடியும்.

மேலும், சிறிய அளவிலான காலி பாட்டில்களை நகைகள் அல்லது சிறிய அலங்காரப் பொருட்களை வைக்கும் பொருளாகவும் பயன்படுத்தலாம். இதுபோல் வீட்டில் தேவையில்லாமல் கிடக்கும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் குப்பையை குறைப்பதுடன், புதிய பொருட்களை வாங்கும் செலவையும் ஓரளவு தவிர்க்கலாம்.